இரட்டை சகோதரிகள்: மேற்கு வங்கத்தை சேர்ந்த மோனா-லிசா என்ற இரட்டை சகோதரிகளுக்கு கடந்த மாதம்தான் 20 வயது நிறைவடைந்துள்ளது. கடந்த நவம்பர் 1, 2002ல் ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகளாக பிறந்தனர் மோனா-லிசா இருவரும். அவர்களுக்கு அப்போதே 30 மருத்துவர்கள் தலைமையிலான கொல்கத்தாவை சேர்ந்த மருத்துவக்குழு அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது. அன்றைய தேதியில் மேற்கு வங்கத்தில் நடந்த ‘ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பாதுகாப்பாக பிரித்தெடுப்பதற்கான’ முதல் வெற்றிகரமான அறுவைசிகிச்சை அதுதான்.
மோனா-லிசாவுக்கு அறுவை சிகிச்சையளித்த மருத்துவர் குழு சார்பில் மருத்துவர் நரேந்திரநாத் முகர்ஜி தெரிவிக்கையில், ‘குழந்தைகளுக்கு நுரையீரல், இதயம் போன்றவை வெவ்வேறாக இருந்தாலும் கூட சில உள்ளுறுப்புகள் ஒட்டியே இருந்தன. அதை பிரித்து எடுப்பதற்கான அறுவை சிகிச்சை சவால் நிறைந்ததாகவே இருந்தது. சுமார் 8 மணி நேரத்துக்கு அந்த அறுவை சிகிச்சை நடந்தது’ என்றுள்ளார்.
மோனா-லிசா இருவருக்கும் தாங்கள் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்று வெகு நாட்கள் கழித்துதான் தன் அம்மா மூலம் தெரிய வந்துள்ளது. அவர்கள் தங்கள் திருமணத்திற்கு முன்பே தாங்கள் ஒட்டிப்பிறந்து பிரிந்த வரலாறை கணவர் வீட்டாரிடம் கூறிவிட்டதாகவும், அவர்களும் எந்த தயக்கமும் இன்றி அவர்களை திருமணம் செய்து கொண்டதாகவும் மோனாவும், லிசாவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது மோனாவுக்கு 15 மாத பெண் குழந்தையும், லிசாவுக்கு 12 மாத பெண் குழந்தையும் உள்ளனர். மோனா-லிசா இருவருக்குமே தாங்கள் பிரிந்த சில காலத்துக்கு உடல் உபாதைகள் இருந்ததாகவும் மருத்துவ உதவியால் அதிலிருந்து விடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மோனாவும், லிசாவும் தங்களின் சுவாரஸ்யமான வாழ்வை கதை போல ஒரு இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.