சபரிமலை: கடந்த நவம்பர் 16ம் தேதி மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாள் முதலே பக்தர்களின் கூட்டம் அலை மோதி வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் தற்போது அது முழுவதுமாக தளர்த்தப்பட்டுள்ளது. அதனால் இந்த வருடம் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரையிலான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். விடுமுறை நாட்களில் ஒரு லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் சபரிமலைக்கு வருகின்றனர்.
சபரிமலை நடை திறக்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலான 30 நாட்களில் 21 லட்சத்து 71 ஆயிரத்து 452 பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர். அவர்களில் நேற்று வரை 19 லட்சத்து 38 ஆயிரத்து 452 பேர் தரிசனம் செய்துள்ளனர். சபரிமலையில் நேற்று மட்டும் 93,456 பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில் 80,190 பேர் தரிசனம் செய்துள்ளனர். சனிக்கிழமையான இன்று 90,287 பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர். இன்று இரவுக்குள் இவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் தரிசனத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பால் அவர்களை பதினெட்டாம்படியில் ஏற்றி விடும் போலீசாருக்கு சிரமம் ஏற்படுகிறது. அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கேரளாவின் பாரம்பரிய இசையான ‘செண்டை மேளம்’ பிரபல இசைக்கலைஞர்களால் தினமும் வாசிக்கப்படுகிறது. பக்தர்கள் வருகை அதிகரிப்பை தொடர்ந்து அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் கேரள அரசு துறை அதிகாரிகளும், திருவிதாங்கூர் தேவஸம் போர்டு அதிகாரிகளும் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். இதனால் இந்த ஆண்டு சபரிமலையில் ஓயாத சரண கோஷம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.