கோகுல்: ஜீவா, ஸ்ரேயா நடிப்பில் வெளியான ‘ரெளத்திரம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனரானவர் கோகுல். அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, கார்த்தி நடித்த ‘காஷ்மோரா’, விஜய் சேதுபதி நடித்த ‘ஜூங்கா’, கீர்த்தி பாண்டியன் நடித்த ‘அன்பிற்கினியாள் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது ஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் கோகுல் அடுத்து இயக்கும் ‘கொரோனா குமார்’ என்ற படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த நிலையில், அவர் சில காரணங்களால் அதில் நடிக்க முடியவில்லை. அதனால் சிம்புவுக்குப் பதிலாக ‘லவ் டுடே’ இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து இயக்குனர் கோகுல் கூறுகையில், ‘எனது இயக்கத்தில் உருவாகும் ‘கொரோனா குமார்’ படத்தைப் பற்றி பல வதந்திகள் வெளியாகின்றன. இதில் சிம்பு நடிக்கவில்லை என்பதால் படம் கைவிடப்பட்டதாக சொல்கிறார்கள். இப்படம் கைவிடப்பட்டதா, இல்லையா என்பதை நான்தான் சொல்ல வேண்டுமே தவிர விஷயம் தெரியாத யார் யாரோ சொல்வதில் உண்மை கிடையாது. ‘கொரோனா குமார்’ படம் கைவிடப்படவில்லை. விரைவில் நாங்கள் ஷீட்டிங் செல்லும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவில்லை. ஹீரோ யார் என்பதை விரைவில் அறிவிக்கிறேன்’ என்று கூறினார்.