மாரி செல்வராஜ்: இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய முதல் திரைப்படம் பரியேறும் பெருமாள். ஒரு நாயை வைத்து நகரும் இப்படம் கீழ்த்தட்டு மக்களின் துன்பம் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை, அவர்கள் கல்விக்காக படும் பாடு போன்றவற்றை அழகாக சொல்லியிருப்பார் மாரி செல்வராஜ். இப்படத்தில் யோகி பாபுவின் காமெடி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து மாரி செல்வராஜ் தனுஷை வைத்து ‘கர்ணன்’ படத்தை இயக்கினார். இப்படமும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறையை கூறுவதாக அமைந்திருந்தது. இப்படமும், இப்படத்தின் பாடல்களும் மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படங்களின் வெற்றியை அடுத்து நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘மாமன்னன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் மாரி செல்வராஜ் ‘வாழை’ என்ற படத்தை தயாரித்து இயக்குகிறார். இந்த படத்தின் தொடக்க விழா தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர் கலையரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.