தனுஷ்: சென்னை கோபாலபுரம் போயஸ் கார்டன் பகுதியில் பல கோடி ரூபாய் செலவில் தனுஷ் மிகப் பிரம்மாண்டமான ஒரு வீடு கட்டியுள்ளார். அங்கு தனது தந்தை இயக்குனர் கஸ்தூரி ராஜா, தாய் தயாரிப்பாளர் விஜயலட்சுமி ஆகியோருடன் குடியேறியுள்ளார். கடந்த மகா சிவராத்திரி அன்று புதிய வீட்டில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் தனுஷின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர். அந்த போட்டோவை வெளியிட்டுள்ள தனுஷின் ஆஸ்தான இயக்குனரும், நடிகருமான சுப்ரமணியம் சிவா தனுஷிற்கு வாழ்த்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,
‘தம்பி தனுஷின் புதிய வீடு, கோயில் போன்ற உணர்வை எனக்கு தருகிறது. வாழும் போதே தாய், தந்தையை சொர்க்கத்தில் வாழவைக்கும் பிள்ளைகள் தெய்வமாக உணரப்படுகிறார்கள். மேலும் தனது பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகவும், நல்ல உதாரணமாகவும் அவர்கள் உயர்ந்து விடுகிறார்கள். இன்னும் பல வெற்றிகளும், சாதனைகளும் உன்னைத் துரத்தட்டும். உன்னைப் பார்த்து ஏங்கட்டும். உன்னைக் கண்டு வியக்கட்டும். வாழ்க தம்பி, வாழ்வாங்கு வாழ்க’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.