துணிவு: போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கிய ‘நேர் கொண்ட பார்வை’, ‘வலிமை’ ஆகிய படங்களில் அஜித் நடித்திருந்தார். தற்போது அவர்கள் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் தான் ‘துணிவு’. இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. இதில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளி்ட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பஞ்சாபில் நடந்த வங்கி கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படம் குறித்து ஹெச். வினோத் கூறியதாவது.
‘வங்கி செட்டுகளைப் பயன்படுத்தியதால் இது வங்கி சம்பந்தப்பட்ட படம் என்று சொல்கிறார்கள். ஆனால் இப்படம் ஒரு மல்டி ஜானர் படம். ஒரு ஜானரில் இக்கதையை அடைத்து விட முடியாது. இது பணத்தைப் பற்றிய படமாக இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் ‘துணிவு’ அயோக்கியர்களின் ஆட்டம் என்று சொல்லலாம். அஜித் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறாரா என்று கேட்கிறார்கள். படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து விஷயங்களும் இடம் பெற்றுள்ளது. அஜித்துக்கு இரட்டை வேடமா என்பது சஸ்பென்ஸ். படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லரை பார்த்துவிட்டு படம் பார்க்க வரலாம்’ என்று அவர் கூறியுள்ளார்.