NLC இல் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாக தி.மு.க, பா.ம.கா கண்டனம் தெரிவித்துள்ளது.
என்எல்சி பொறியாளர் பணியிடத்தில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிப்பு பற்றி விவாதிக்கக் கோரி மக்களவையில் தி.மு.க நோட்டீஸ் வழங்கியுள்ளது. இது தொடர்பாக “என்.எல்.சி நிறுவனத்தின் நிரந்தரப் பணியிடங்களில் 90 விழுக்காடு அளவு வட இந்தியர்களுக்கே வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 100 விழுக்காடு பணிவாய்ப்பும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டிருப்பது பெரும் வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
என்.எல்.சி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் திட்டமிட்டு துரோகம் இழைக்கும் கொடிய செயலாகும்” என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு காட்டமாக கூறியுள்ளார்.

இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் நூறு விழுக்காடு பட்டதாரிப் பொறியாளர்கள் இடங்களுக்கும், தமிழக இளைஞர்களைத் திட்டமிட்டே தவிர்த்து விட்டு, வட இந்திய பொறியாளர்களை மட்டுமே தேர்வு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரிய செயலாகும்.
என்.எல்.சி சுரங்கங்கள் அமைக்க நிலம் கொடுத்தவர்கள் பாட்டாளிகள். தொடக்க காலத்தில் அதன் வளர்ச்சிக்காக உழைத்தவர்கள் தமிழர்கள். அதனால் வளர்ந்த என்.எல்.சி நிறுவனத்தின் பயன்களை வட இந்தியர்களும், பிற மாநிலத்தவரும் சுரண்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. என்.எல்.சி நிறுவனத்திற்கு கேட் (GATE) தேர்வு மூலம் நியமிக்கப்பட்டுள்ள 299 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மாநில ஒதுக்கீடும், நிலம்கொடுத்தவர்களுக்கு முன்னுரிமையும் வழங்க என்.எல்.சி நிறுவனம் மறுத்தால், கடலூர் மாவட்ட மக்களைத் திரட்டி என்.எல்.சிக்கு பூட்டு போடும் மாபெரும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என அன்புமணி எச்சரித்துள்ளார்.