இங்கிலாந்து: இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இருந்து பெங்களூரு நோக்கி ஏர் இந்தியா விமானம் வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் விஸ்வராஜ் வெமலா என்ற 48 வயதுமிக்க இங்கிலாந்து வாழ் இந்திய டாக்டர் தனது தாயாருடன் வந்துள்ளார். அவருடன் விமானத்தில் பயணம் செய்த சக பயணி ஒருவருக்கு நடுவானில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக டாக்டர் விஸ்வராஜ் விரைந்து செயல்பட்டு அந்த பயணியை காப்பாற்றி உள்ளார்.
இதுபற்றி டாக்டர் விஸ்வராஜ் கூறும்போது, ‘எனது மருத்துவ பயிற்சியின்போது இதுபோன்ற சூழல்களை சந்தித்து உள்ளேன். ஆனால் 40 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் இது போன்ற ஓர் அனுபவம் ஏற்பட்டது இல்லை. ஏறக்குறைய ஒரு மணி நேரம் போராடி அவருக்கு மீண்டும் சுவாசம் கொண்டு வரவைத்தேன். ஆனால் இரண்டாவது முறையாக அந்த நோயாளிக்கு மற்றொரு முறை மாரடைப்பு ஏற்பட்டது. இந்த முறை நீண்ட நேரம் அவரை காப்பாற்ற போராட வேண்டியிருந்தது. மொத்தம் 5 மணி நேரம் போராடி அவரது உயிரை காப்பாற்றினோம்’ என்று அவர் கூறினார். டாக்டரின் இந்த துரிதமான செயல் அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றுள்ளது.