12ம் வகுப்பு விடைத்தாள் நகலை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி முடிவடைந்தது. அதேபோல், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற்றது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி முடிவடைந்தது.
இந்நிலையில், 10 மற்றும் 12 ம் வகுப்பிற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 1 முதல் நடைப்பெற்றது. 10, 12 ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெவ்வேறு நாட்களில் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் தேதி மாற்றப்பட்டு இரண்டு பொதுத் தேர்வு முடிவுகளும் ஓரே நாளில் சமீபத்தில் வெளியாகியது.
12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதிய விடைத்தாள் நகல் கோரி மாணவர்கள் பலர் விண்ணப்பித்திருந்தனர். விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்து மறுகூட்டல் மற்றும் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் அரசு தேர்வு துறையின் இணையதளத்தில் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை நாளை முதல் பகல் 12 மணியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது. http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விடைத்தாள் நகலை பதிவிறக்கலாம். மறுகூட்டலுக்கு வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 15-ம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இரண்டு நகல்கள் எடுத்து ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கட்டணத்தை மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணமாக செலுத்தலாம் என்றும் புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ,கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை மாவட்டங்களில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் விண்ணப்பங்களை ஒப்படைத்து அதற்குரிய கட்டணங்களை செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.