மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தலைவர்களின் வரிசையில் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் 7வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவின் கடைக் கோடியில் பிறந்து பல சாதனைகளை நிகழ்த்தி இந்திய மக்களின் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த தலைவர் கலாம் ஐயா என்றால் மிகையாது. அவரின் உடல், மனம், ஆன்மா இப்படி எல்லாமே ஊன்றுகோலாய் நிற்கும் அவரின் அறிவுரைகள் இளைஞர்களுக்கு.
எந்நாளும் குழந்தைகளுடனும் இளைய சமூகத்தின் மீதும் தீராத அன்பு கொண்டவர் இயற்கை மீது காதல் கொண்டவர் மரங்களை சுவாசமாக பெற்றவர். இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக விளங்கியவர்.

நமது நாட்டின் உன்னதமான தலைவர், தலைசிறந்த விஞ்ஞானி, மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர் என்பதை எல்லாம் தாண்டி மிகச் சிறந்த மனிதராக வாழ்ந்து மறைந்திருக்கிறார் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம். 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பிறந்தார் அப்துல்கலாம். ராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கிய அப்துல் கலாமின் வாழ்க்கை பயணம் 2002 ஆம் ஆண்டு இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக உயரிய பதவியில் அரியணை ஏறும்படியாக மாறியது.
2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி ஷில்லாங் பகுதியில் மாணவர்கள் மத்தியில் பேசி கொண்டிருந்த போது மாரடைப்பு காரணமாக அப்துல் கலாம் உயிரிழந்தார். அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகில் உள்ள பேய்க்கரும்பு எனும் இடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று 7வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அப்துல்கலாமின் நினைவிடம் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அப்துல்கலாம் அவர்களின் உறவினர்கள், மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர்கள் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
இளைஞர்களை கனவு காணுங்கள் என்றவர் கனவின் வழியே உங்கள் வாழ்க்கை பாதையை உருவாக்குங்கள் என்றும் உறங்கும் போது காண்பதல்ல கனவு உறங்கவிடாமல் செய்வதே கனவு என்றவர்.