ராதாகிருஷ்ணன்: இன்று சுனாமி தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு பட்டினப்பாக்கம் மீனவ குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்துவதற்காக உணவு மற்றும் கூட்டுறவுத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் தமது இனோவா காரில் அங்கு சென்று கொண்டிருந்தார். பட்டினப்பாக்கம் இணைப்பு சந்திப்பில் வருகை தந்தபோது சென்னையில் இருந்து மேல்மருவத்தூர் நோக்கி செல்லும் டூரிஸ்ட் வாகனம் தவறாக சென்றதால், செயலாளர் ராதாகிருஷ்ணன் காருடன் நேருக்கு நேர் மோதியதில் அவரது காரின் முன் பகுதி முழுவதும் சேதாரமானது. எதிரில் வந்த டூரிஸ்ட் வாகனம் தவறான வளைவில் வந்ததால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிர்ஷடவசமாக விபத்தில் எந்த வித காயமுமின்றி தப்பிய கூட்டுறவு துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தாமாகவே சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரிசெய்ததுடன் சுனாமி தினத்தை ஒட்டி பட்டினப்பாக்கத்தில் மீனவர்களுடன் அஞ்சலியும் செலுத்தினார். விபத்து நடந்த பகுதியில் இருந்து 200 மீட்டருக்குள் மெரினா காவல் நிலையம் இருந்தும் விபத்து குறித்தோ அல்லது போக்குவரத்து நெரிசலை சரிசெய்யவோ நெடுநேரமாக எந்த காவலர்களும் வராமல் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.