இந்திய வீரர்கள்: d ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. சிட்னியில் நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நாளை மறுநாள் அடிலெய்டில் நடக்கும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கு தயாராவதற்காக இந்திய அணி வீரர்கள் அடிலெய்டில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் அரையிறுதிப் போட்டிக்கு செல்வதற்காக விமானத்தில் பயணம் செய்த நிலையில், தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட பிசினஸ் கிளாஸ் சீட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்களுக்காக விட்டுக்கொடுத்துள்ளனர்.
ஐசிசி விதிமுறைகளின்படி ஒவ்வொரு அணிக்கும் நான்கு பிசினஸ் கிளாஸ் சீட்டுகள் கிடைக்கும். பெரும்பாலான அணிகள் இந்த சலுகையை தங்களது பயிற்சியாளர்கள், கேப்டன், துணை கேப்டன், முன்னாள் கேப்டன் மற்றும் மூத்த வீரர்கள் ஆகியோருக்கு வழங்குகின்றன. இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், புவனேஷ்குமார மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு பயிற்சியாளர் டிராவிட், விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட பிசினஸ் கிளாஸ் சீட்டுகளை கொடுத்துள்ளனர். மெல்போர்னில் இருந்து அடிலெய்டுக்கு விமானத்தில் செல்வதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகும். இந்த பயண நேரத்தில் பந்து வீச்சாளர்கள் கால் வலி மற்றும் முதுகு வலியை எதிர்கொள்ள நேரிடும். எனவே பிசினஸ் கிளாஸ் சீட்டுகளில் அமரும்போது கால்களை நீட்டி வசதியாக அமர அவர்களுக்கு போதுமான இடம் கிடைக்கும் என்பதால் அவர்கள் அந்த சலுகையை விட்டுக் கொடுத்துள்ளனர். இந்நிகழ்ச்சி கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.