காட்டு யானை: ஊட்டியில் உள்ள நீலகிரி மலையில் முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. அங்கு ஏராளமான வனவிலங்குகள் வாழ்கின்றன. அதனால் சுற்றுலாத் தளமான ஊட்டி மற்றும் நீலகிரி வனப்பகுதிகளில் விலங்குகளுக்கு தீங்கு தரக் கூடிய பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நீலகிரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் சிலர் தடையை மீறி பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வருகின்றனர்.
ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் தங்களுடன் கொண்டு வரும் பிளாஸ்டிக் குப்பைகளை வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும் பொது இடங்களிலும் வீசி செல்கின்றனர். இவைகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் இப்பகுதிகளில் அத்துமீறி நுழைவது, குப்பைகளை வீசி செல்வது போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி வனத்தை சுற்றியுள்ள குப்பைகளும், கழிவுகளும் உடனுக்குடன் அகற்றப்படுகின்றன.
இந்நிலையில், முதுமலை காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி- தெப்பக்காடு சாலையோரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த காட்டு யானை ஒன்று புல்வெளியில் கடந்த பிளாஸ்டிக்கை தனது தும்பிக்கையால் எடுத்து உட்கொள்கிறது. இதனை அவ்வழியாக சென்ற நபர்கள் வீடியோவாக எடுத்து பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து சுற்றுசூழல் சமூக ஆர்வலர்கள் கூறுகையில் ‘ பிளாஸ்டிக்குடன் வீசப்படும் உணவு கழிவுகளால் கவர்ந்திழுக்கப்படும் வனவிலங்குகள் அவற்றை பிளாஸ்டிக்குடன் சாப்பிட்டு விடும். இதனால் அவைகளுக்கு வயிற்றுக் கோளாறுகள் ஏற்பட்டு அவைகள் இறக்கும் அபாயம் உள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகள் நீலகிரி வனப்பகுதிகளுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதையும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.