எல்லாம் நேற்று நடந்தது போல் உள்ளது ஜெயம் ரவி நெகிழ்ச்சி திரைவுலகிற்கு வந்து 19 ஆண்டுகள் நிறைவடைந்தது என்று கூறியுள்ளார்.
ரவி என்ற இயற்பெயருடன் நடிக்க வந்தவர் 2003 ஆண்டு ஜெயம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்படங்களில் அறிமுகமாகி அப்படத்தின் ஏகோபித்த வெற்றியின் மூலம் தன் பெயரை ரசிகர்கள் ஜெயம் ரவி என்றே அழைக்கும் நடிகராக முதல் படத்தின் மூலம் உயர்தார். தன் அண்ணன் ஏணியாய் இருந்து தனது தம்பிக்கு முதல் படத்தை அதிலும் வெற்றி பெறும் கதைக்களத்தை கொடுத்து உயர்த்தியுள்ளார் என்றால் அது மிகையாகாது.
அதே அண்ணன் டைரக்ஷனில் அடுத்தடுத்து ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம்’ என வெற்றி கொடுத்தாலும் ஆரம்ப காலங்களில் மற்ற இயக்குனர்களின் படங்களில் ஜெயம் ரவி நடித்த படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. 2009ம் ஆண்டில் வெளிவந்த ‘பேராண்மை’ படம் தான் அவருக்கு அந்த வெற்றியைப் பெற்றுத் தந்தது. அந்தப் படம் மூலம் ஆக்ஷன் ஹீரோவாகவும் உயர்ந்தார்.

எல்லாம் நேற்று தான் நடந்தது போல் இருக்கிறது. என் முதல் படமான ஜெயம் படத்துக்குக்காக முதல்முறையாக கேமராவை எதிர்கொண்ட நினைவு இன்னும் என் நினைவில் இருக்கிறது. இன்று நான் 19 வருடங்களை நிறைவு செய்துள்ளேன். இது ஒரு மேஜிக் போல் தெரிகிறது.
இந்த திரைப்பயணத்தின் பின்னணியில் படைப்பாளிகள் மற்றும் வித்தகர்கள் பலர் உள்ளனர். நான் ஒரு நடிகன். அவர்கள் பார்வையை திரையில் மொழிபெயர்த்த ஒரு ஊடகம் மட்டுமே. எனது திறமை மற்றும் ஆர்வத்திற்கு முழு ஆதரவாக எனது தந்தை இருந்துள்ளார்.
ஒரு நடிகராக இருப்பதற்கான எனது திறனை நான் சுயமாக உணரும் முன்பே, எனக்கு அவர் அடையாளம் காட்டினார். உணர்வுபூர்வமான தருணங்களில் ஆதரவாக இருந்த என் அம்மா தான் என் முதுகெலும்பு. எனது மூத்த சகோதரர் ராஜ எப்போதும் ஒரு வெற்றிகரமான நடிகராக என்னை கற்பனை செய்து, அவரது முத்திரை கையால் என்னை நட்சத்திரமாக மிளிர்ச் செய்தார்.
என்னுடைய முதல் விமர்சகரும் நண்பருமான என் மனைவி ஆர்த்திக்கு நன்றி.என் உத்வேகத்தின் ஆதாரமாக இருந்த திரைத்துறையில் உள்ள எனது மூத்த நடிகர்களுக்கு நன்றி. அவர்களின் இடைவிடாத ஆற்றல், தீராத ஆர்வம் மற்றும் அவர்களின் தொழிலின் மீதான முழுமையான அர்ப்பணிப்பு ஆகியவை தான் என்னை மிகவும் உந்துதலாக வைத்திருக்கின்றன. ஒவ்வொரு படத்திலும் நான் பெரிய உயரத்தை எட்டிப்பிடிக்க வேண்டும் என்று தீவிரமாக விரும்பிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், சக நடிகர்கள், தொழில்துறை நண்பர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி.