மருத்துவ குணம் நிறைந்த கருப்பு கவுனி அரிசி எத்தனை பலன்கள் நிறைந்தது என்பதை இப்பதிவின் மூலம் பார்ப்போம்.
இயற்கையான பொருட்கள் எல்லாமே மருத்துவ குணம் உடையது என்பதில் எந்த ஓரு ஐயப்பாடும் இல்லை. ஆனால் ஓவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தனித்தனி வித்யாசம் நிறைந்து காணப்படுகிறது. அவ்வகையில் நாம் உண்ணும் உணவில் அரிசியின் பங்கு ஏராளம்.
அரிசியின் வகைகள் நிறைய உண்டு அதிலும் பாரம்பரிய அரிசியான வரகு அரிசி, கிச்சடி சம்பா, குதிரை வாலி, திணை அரிசி, கருப்பு கவுனி, சாமை என பல இப்போது தான் அனைத்து கடைகளிலும் காண முடிகிறது. மக்கள் இதனை இப்போது தான் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதன் விளைவே கடைகளில் காணப்படுகிறது.

நாம் பயன்படுத்தும் வெள்ளை அரிசியில் சர்க்கரை வியாதிகள் அதிகம் வர வாய்ப்பு உள்ளதால் தற்போது பாரம்பரிய அரிசியின் பக்கம் திரும்பியுள்ளோம். இவ்வரிசியை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அரிசி வகைகளில் மிக முக்கிய பங்கு வகிப்பது கருப்பு கவுனி அரிசி இதில் நார்சத்து அதிகம் உள்ளது.
உணவுக்குப்பின் ரத்தச் சர்க்கரை அளவு உயராமல், சீராக இருக்க உதவுகிறது. மலச்சிக்கல், செரிமானப் பிரச்னைகள், வாய்வு, வயிற்று வீக்கம், வயிற்று வலி போன்ற பிரச்னைகளுக்கும் இந்த அரிசி மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது.
கருப்பு கவுனி அரிசியின் நன்மைகள்:
- அரிசியில் உள்ள நார்ச்சத்தின் அளவை விட கருப்பு கவுனி அரிசியில் இரண்டு மடங்கு நார்ச்சத்து அதிகம் உள்ளது.
- கருப்பு கவுனி அரிசியை தினமும் சாப்பிட்டால் தமனியில் கொழுப்பு படிதலை குறைத்து மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது.
- கருப்பு கவுனி அரிசியில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து ‘LDL’ என்ற கெட்ட கொலஸ்ட்ரால் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
- கருப்பு கவுனி அரிசியில் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்துள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுவதோடு, உடலுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது.
- கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து வளமான அளவில் உள்ளது. கருப்பு கவுனி அரிசி சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைகிறது.
- வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும் போது, கருப்பு கவுனி அரிசியில் அதிக புரதச்சத்து அடங்கி இருக்கிறது. இது உடலில் தசைகளை உருவாக்குவதிலும், உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது.
- கருப்பு அரிசியில் உள்ள ஆந்தொசயின்கள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கின்றன.மேலும், கண் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய இரண்டு வகையான கரோட்டினாய்டுகள் இதில் உள்ளது.
இப்படி ஆரோக்கியம் நிறைந்த அரிசியாக கருப்பு கவுனி இருக்கிறது. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவ்வரிசியை உண்பது நலம் பயக்கும்.