சீன மொழி தெரிந்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை வழங்கப்படும் என இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.
சமீபத்தில் மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை நாடு முழவதும் கொண்டு வந்தது அதற்கான விண்ணப்பங்களும் முடிவடைந்து உள்ளன. அக்னிபாத் திட்டத்திற்கு பல எதிர்ப்புகள் இருந்த போதிலும் சுமார் ஏழு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்திய ராணுவத்தை அச்சுறுத்தும் வகையில் சீன ராணுவம் இந்திய எல்லைகளில் அவர்களின் ராணுவத்தை நிறுத்தி வருகிறது. இதன் காரணமாக இரு நாட்டு எல்லைகளிலும் பதற்றம் சூழ்ந்துள்ளது. எனவே சீன ராணுவத்துடன் பேச சின மொழி தெரிந்த நபர்களை ராணுவத்தில் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியா – சீனா எல்லையில் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பரபரப்பு நிலவி வருகிறது. இரு நாடுகளின் எல்லையான லடாக் LAC-Line of Actual Control பகுதியில் இரு நாட்டு வீரர்களும் 2020ஆம் ஆண்டு கடுமையாக மோதிக்கொண்டனர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவமும் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டது. இந்த மோதல் போக்கை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க இரு நாட்டு வெளியுறவுத்துறை, ராணுவ தலைமைகள் பல்வேறு கட்டமாக பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. பதற்றமான பகுதிகளில் இருந்து படைகளை விலக்கும் முயற்சியில் இரு நாடுகளும் பேசி வருகின்றன.
அதேவேளை, எல்லை பகுதியை பலப்படுத்த இரு நாடுகளும் புதிய யுக்திகளை கையாண்டு வருகின்றன. அதன்படி, கடந்த மே மாதத்தில் சீனாவின் பல்வேறு பல்கலைக்கழகத்தில் இருந்து இந்தி மொழி தெரிந்த நபர்களை ராணுவ பணிக்கு எடுக்கும் நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டதாக தகவல் வெளியானது. இந்தி தெரிந்த நபர்கள் எல்லையில் பணியில் இருப்பது சீனா ராணுவத்திற்கு பல்வேறு விதத்தில் உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்த நகர்வை சீனா மேற்கொண்டுள்ளது.
இதற்கு பதில் தரும் விதமாக இந்திய ராணுவமும் தற்போது புதிய நகர்வை மேற்கொண்டுள்ளது. அதன்படி, எல்லையில் ராணுவத்தில் பணியாற்ற சீன மொழி(Mandarin) தெரிந்த நபர்களை வேலைக்கு எடுக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
18 வயது முதல் 42 வயதுக்குட்பட்ட நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். முதல் கட்டமாக ஆறு பேர் இந்த பணிக்காக தேர்வு செய்யப்படவுள்ளனர் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராணுவ வீரர்களுக்கும் சீனா மொழி அதன் எழுத்துக்கள் தொடர்பான அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.