இந்திய பேரிடர் குழு: நிலநடுக்கத்தால் பேரழிவை சந்தித்திருக்கிறது துருக்கி. இதில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் தரை மட்டமாகியுள்ளன. இடிபாடுகளில் சிக்கி சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கானோரை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் துருக்கி மட்டுமின்றி அதன் அண்டை நாடான சிரியாவும் பலத்த சேதத்தை எதிர்கொண்டிருக்கிறது.
இந்த சூழலில் நிலநடுக்கத்தால் நிலைகுலைந்துள்ள துருக்கிக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. பிரதமர் மோடி அவர்களின் உத்தரவின் பேரில் இந்தியாவிலிருந்து, துருக்கியில் மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக 101 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் இரு குழுக்களாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். துருக்கிக்கு விரைந்துள்ள அவர்கள் அந்நாட்டு மீட்பு படையினருடன் இணைந்து இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களுடன் சிறப்புப் பயிற்சி பெற்ற மோப்ப நாய்களும் சென்றுள்ளன. ஜூலி, ஹனி, ரோமியோ, ராம்போ என்ற பெயர் கொண்ட அந்த மோப்ப நாய்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டுக்களை பெற்று வருகிறது.