எட்டுத்தொகை நூல்கள் யாவை?

0
41

எட்டுத்தொகை நூல்கள் எண் + தொகை = எட்டுத்தொகை. எட்டு நூல்களின் தொகுதி. சங்க இலக்கிய நூல்கள் அனைத்தும் அக நூல்கள் புற நூல்கள் என தொகுக்கப்பட்டிருக்கும். 

சங்க இலக்கிய நூல்கள் பழங்கால மக்களின் பாரம்பரியம், நாகரீகம், பண்பாடு, தொழில், விளையாட்டு, உணவு, நம்பிக்கை, பழக்கவழக்கம் என அனைத்தும் தமிழரின் வரலாற்றை பறைசாற்றுவனவாக அமைந்துள்ளது.

சங்க இலக்கிய நூல்களில் ஒவ்வொரு நூலும் பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டது. இவற்றில் பல பாடல்களில் அவற்றை எழுதியவரது பெயர் காணப்படவில்லை. தொழில், அளவு, பாட்டு, பொருள் ஆகியவற்றால் தொகுக்கப்ப்பட்டமையால் தொகை எனப் பெயர் பெற்றது.

இத்தொகை நூல்களுள் ஏறத்தாழ 2352 பாடல்களை 700 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் 25 அரசர்களும், 30 பெண்பாற்புலவர்களும் உண்டு. ஆசிரியர் பெயர் தெரியாப் பாடல்கள் 102.

எட்டுத்தொகை நூல்களுள் பரிபாடலும், கலித்தொகையும் தவிர்த்து மற்றவை ஆசிரியப்பாவால் அமைந்து சில சமயம் வஞ்சிப்பாவால் வரப்பெற்று அமைந்துள்ளன. 3 அடிகள் சிற்றெல்லையாகவும் 140 அடிகள் பேரெல்லையாகவும் பெற்றுள்ளன. இந்நூல்கள் கடைச் சங்க காலத்தில் இயற்றப்பட்டன என்பர். தொகுக்கப்பட்ட காலம் கி.பி.3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு என்றும் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

எட்டுத் தொகை நூல்களுள் அகம் பற்றிய நூல்கள் : நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு.

புறம் பற்றிய நூல்கள் : பதிற்றுப்பத்து, புறநானூறு

அகமும் புறமும் கலந்த நூல் : பரிபாடல்

அகப்பாடல்கள் அனைத்தும் முழுமையாகக் கிடைத்துள்ளன. புறப்பொருட் பாடல்களுள் சில அழிந்தும், சில சிதைந்தும், பாடவேறுபாடுகள் மிகுந்தும் காணப்படுகின்றன.

அகநூல்கள் என்றால் என்ன?

ஓத்த தலைவனும் தலைவியும் தாமே கூடி இன்புறும் இல்லற வாழ்வை பற்றியது. இன்னார்க்கு இன்னது என்று கூற முடியாதது. வெளிப்படையாக கூற முடியாத இல்லற வாழ்வை பற்றியது. பொருள் தேடி சென்ற தலைவன் வரும் வரை தலைவி இல்லத்திலே காத்திருத்தல், வரவை கோடிட்டு எண்ணி காத்திருத்தல், பசலை பாய்தல், கொடிய பாதைகளின் நிலை என்பவற்றை அடிப்படையாக அமைந்த பாடல்கள் இடம் பெற்றிருக்கும்.

புறநூல்கள் என்றால் என்ன? இன்னார்க்கு இன்னது நிகழ்ந்தது என்று கூற முடிந்தது. வீர்ம, போர், கொடை பற்றிய பாடல்களே இடம் பெற்றிருக்கும்.

அகமும் புறமும் கலந்த நூல்களை என்றால் என்ன?

அகச்செய்திகளும் புறச் செய்திகளும் கலந்து வருவது.

மேலும், இப்பதிவில் எட்டுத்தொகை நூல்கள் ஓவ்வொன்றையும் தொகுத்தவர் (பாடலை பாடிய புலவர்) யார்? தொகுப்பித்தவர் (நூலை தொகுக்க உதவியவர்) யார்? என்பதை அறியலாம்.

தெரிந்துகொள்க: பத்துப்பாட்டு நூல்கள்

எட்டுத்தொகை நூல்கள் பற்றிய பழைய வெண்பா : 

”நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை”.

என்னும் பழைய வெண்பா எட்டுத் தொகை நூல்களை விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

எட்டுத்தொகை நூல்கள் தொடர்பான அட்டவணை:

நூல் புலவர் பாடல் அடி பொருள் தொகுத்தவர் தொகுபித்தவர் கடவுள் வாழ்த்து பாடியவர் தெய்வம்
நற்றிணை 175 400 9-12 அகம் தெரியவில்லை பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி பாரதம் பாடிய பெருந்தேவனார் திருமால்
குறுந்தொகை 205 400 4-8 அகம் பூரிக்கோ தெரியவில்லை பாரதம் பாடிய பெருந்தேவனார் முருகன்
ஐங்குறுநூறு 5 500 3-6 அகம் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை பாரதம் பாடிய பெருந்தேவனார் சிவன்
பதிற்றுபத்து 8 100(80) 8-57 புறம் தெரியவில்லை தெரியவில்லை
பரிபாடல் 13 70(22) 25-400 அகம் + புறம் தெரியவில்லை தெரியவில்லை
கலித்தொகை 5 150 11-80 அகம் நல்லந்துவனார் தெரியவில்லை நல்லந்துவனார் சிவன்
அகநானூறு 145 400 13-31 அகம் உருத்திர சன்மனார் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி பாரதம் பாடிய பெருந்தேவனார் சிவன்
புறநானூறு 158 400 4-40 புறம் தெரியவில்லை தெரியவில்லை பாரதம் பாடிய பெருந்தேவனார் சிவன்

 

இதுபோன்ற தமிழ் இலக்கியங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் ஆன்மீகம், ஜோதிடம், உடல்நலம், செய்திகள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள தலதமிழ் இணையதளத்தை படியுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here