டிஎன்பிஎஸ்சி: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 7,301 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வை 2022 ஜூலை மாதம் 24ம் தேதி நடத்தியது. 10ம் வகுப்பு தேர்ச்சிதான் கல்வித் தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் என லட்சக்கணக்கானோர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். எனினும் இறுதியாக விண்ணப்பத்தின் அடிப்படையில் 18.36 லட்சத்து 535 பேர் தேர்வு எழுதினர். ஒரே நேரத்தில் 18 லட்சம் பேருக்கும் மேல் தேர்வு எழுதியது டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் சாதனையாக கருதப்பட்டது. அந்த அளவுக்கு குரூப் 4 திருவிழா போல நடந்து முடிந்தது.
இதற்கான ரிசல்ட் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு மூன்று முறை அறிவித்தும் ரிசல்ட் வெளியாகவில்லை. தொடர்ந்து கடந்த மாதம் 14ம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டது. அதில் எவ்வித தவறுக்கும் இடம் இல்லாமல் வரும் மார்ச் மாதத்தில் முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் இம்மாத இறுதிக்குள் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் தற்போது தேர்வாணையத்தில் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும் இத்தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.