ஆசிப் அலியின் செயலால் BANASIF ALI என்ற ஹேன்ஸ்டாக் டிவிட்டர் சமூகதளத்தில் டிரன்டிங்கில் உள்ளது.
ஷார்ஜா: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் ஃபரித் அகமதை பாகிஸ்தான் வீரர் ஆசிஃப் அலி பேட்டால் தாக்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 15-வது ஆசியக் கோப்பை தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் இலங்கை என அடுத்தடுத்த தோல்விகளை “சூப்பர் 4” சுற்றில் சந்தித்ததன் காரணமாக இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டது.
இந்நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முக்கியமான போட்டி சார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாசை வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்து வீசுவதாக தெரிவித்தார்.

அதன்படி முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான அணி துவக்கத்தில் மிகச் சிறப்பாக பேட்டிங்கை துவங்கினாலும், பின்னர் இரண்டாவது பாதியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை மட்டுமே குவித்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பாக இப்ராஹிம் ஜார்டான் 35 ரன்கள் குவித்தார்.
பின்னர், 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சிறிய இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணியினர் சென்றனர். 83 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 3 விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் 6 விக்கெட்டுகளையும் இழந்து கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது. அப்போது பாகிஸ்தான் வீரர் நஷிம் ஷா தொடர்ந்து 2 சிக்சர்களை விளாசினார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி வென்றதுடன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில், இப்போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர் ஆசிப் அலி ஆப்கானிஸ்தான் அணி வீரர் ஃப்ரித் வீசிய பந்தில் அவுட்டாகி வெளியேறினார். அப்போது ப்ரித் துள்ளி குதித்து மகிழ்ந்தார். அதனை பார்த்த ஆசிப் அலி அவரை ஓங்கி பேட்டால் அடிக்க முற்பட்டார் பின்னர் அனைவரும் வந்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதனால் இது அங்கு கூடி இருந்த ரசிகர்களிடையேயும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அரங்கில் இருந்த ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் பாகிஸ்தான் ரசிகர்கள் மீது நாற்காலிகளை மேலே போட்டு சண்டையிட துவங்கினர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. பின்னர் போலீஸ் துணையுடன் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
இதனால் ஆசிப் அலியை நிறுத்தி வைக்க வேண்டும் என டிவிட்டர் கணக்கில் டிரென்டிங் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.