ஜெய்ப்பூர் அரண்மனை: இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு ஹீரோயினாக நடித்து வருபவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் தனுஷ் நடித்த ‘மாப்பிள்ளை’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பிறகு தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார். இசை ஆல்பங்கள், வெப் தொடர்கள், டிவி நிகழ்ச்சிகள், விளம்பர படங்கள் ஆகியவற்றிலும் நடித்துள்ளார். தமிழில் அவர் நிறைய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவர் சிம்புவுடன் நடித்த ‘மஹா’ அவரது 50வது படமாகும்.
சில ஆண்டுகளாக புதுப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் தடுமாறி வந்த ஹன்சிகா சில மாதங்களுக்கு முன் மும்பை தொழிலதிபர் சோஹைல் கதுரியாவை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் அறிவித்திருந்தார். ஹன்சிகா தோழியை திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தவர் சோஹைல் கதுரியா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர்களது திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் ஜெய்ப்பூரிலுள்ள முண்டோடா அரண்மனையில் சிந்து முறைப்படி நேற்று இரவு நடைபெற்றது. இதில் மணமக்கள் குடும்பத்தினரும், நெருக்கமான நண்பர்களும் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் மணமக்கள் வீட்டார் சார்பில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும், விருந்தும் நடைபெற்றது. அப்போது ஹன்சிகாவும், சோஹைலும் தமிழ்ப் பாடலுக்கு இணைந்து நடனமாடினர். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று ஹன்சிகா கூறியுள்ளார். அவரது திருமண நிகழ்ச்சிகளைப் படமாக்கி வெளியிட ஓடிடி தளம் ஒன்றுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.