ஹரியானா: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை அதிகாலையில் எழுந்து படிக்க வைப்பது என்பது மிகவும் சவால் நிறைந்த காரியமாகவே உள்ளது. இந்த சவாலை சமாளி்ப்பதற்காக ஹரியானா அரசு ஒரு வித்தியாசமான அணுகுமுறையை கையில் எடுத்துள்ளது. அதாவது பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அம்மாநில பள்ளிக்கல்வித் துறை சார்பில் கோயில்கள், மசூதிகள் மற்றும் குருத்வாராக்களிடம் முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி அதிகாலை 4.30 மணியளவில் வழிபாட்டு தளங்கள் மாணவர்களை எழுப்பும் விதமாக ஒலி எழுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் அதிகாலை சமயம்தான் படிப்பதற்கு ஏற்ற நேரமாகும். அப்போதுதான் மூளையும் மனதும் புத்துணர்ச்சியாக இருக்கும். வாகனம் சத்தம் ஏதும் இருக்காது.
அது மட்டுமின்றி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் ஆசிரியர்கள், பெற்றோர்களை தொடர்பு கொண்டு மாணவர்கள் 4.30 மணிக்கு எழுந்து தயாராகி 5.15 மணிக்கு படிக்க தொடங்கிவிட்டார்களா இல்லையா என்பதை வாட்ஸ் குரூப் வாயிலாக கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோக பஞ்சாயத்து நிர்வாகத்திடமும் வழிபாட்டு தளங்கள் மூலம் ஒலி எழுப்ப மாநில கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.
மேலும் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதற்கு சரியான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு. குழந்தைகளின் கல்விக்கு ஆதரவளிக்கும் சமூகமே நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய பங்காக இருக்கும்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.