கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக யூடியூப் சேனல்கள் விசாரணை நடத்துவதை தடுக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் என்ற கிராமத்திலிருக்கும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் பெரிய நெசலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த தம்பதியின் 17 வயது மகள் படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி ஜூலை 13-ம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இறந்த பள்ளி மாணவியின் சடலத்தை பள்ளி நிர்வாகம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது. உடற்கூராய்வில் மாணவி தற்கொலை செய்துகொண்டு இறந்ததாக கூறப்பட்டிருந்ததாக தெரிகிறது. எனினும் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இதனை ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் போராட்டம் கலவரமாக மாறி பள்ளி வளாகத்திற்கு புகுந்த கலவரக்காரர்கள் பள்ளி பேருந்து உள்ளிட்டவற்றை தீ வைத்து எரித்ததால் பதற்றம் ஏற்பட்டது. பிற மாவட்டங்களில் இருந்து போலீசார் குவிக்கப்பட்டு கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில், தனது மகளின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என மாணவியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதனை ஏற்ற உயர்நீதிமன்றம் சிபிசிஐடி விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. இதற்கு மத்தியில் போராட்டத்திற்கும் கலவரத்திற்கும் ஸ்ரீமதியின் பொற்றோருக்கும் உறவினர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என கண்டு அவர்களை விசாரிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், விசாரணை என்ற பெயரில் யூடியூப் சேனல்கள் விசாரணை நடத்துவதை தடுக்கவும் காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. வன்முறை தொடர்பாக தவறான தகவல் பரப்புவதை தடுக்கும் விதத்திலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.