‘கதக்’ பிரியாணி: கதக் என்பது மக்காச்சோள ரவையாகும். சுவையான ஆரோக்கியமான மக்காச்சோள ரவையில் பிரியாணி எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மக்காச்சோள ரவை – 1/2 கி
கடுகு – சிறிதளவு
உ.பருப்பு – சிறிதளவுக்ஷ
க.பருப்பு – சிறிதளவு
பெ.வெங்காயம் – 2
ப.மிளகாய் – 2
தக்காளி – 1
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
புதினா – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
கேரட் – 2
பீன்ஸ் – 5
உ.கிழங்கு – 1
ப.பட்டாணி – சிறிதளவு
மி.தூள் – 1 டீஸ்பூன்
ம.தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
நெய் – சிறிதளவு
முந்திரி – 10
செய்முறை
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் இரண்டையும் தேவையான அளவு ஊற்றி அதில் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு போட்டு தாளிக்கவும். பின்னர் பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி எண்ணெயில் போட்டு நன்கு வதக்கவும். பின்பு பச்சை மிளகாயை வெட்டி சேர்க்கவும். இவை நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு மேலே குறிப்பிட்டுள்ள காய்கறிகளை பொடியாக நறுக்கி இதில் போட்டு நன்கு வதக்கவும். காய் நன்கு வதங்கியதும் புதினா, மல்லி சேர்த்து நன்கு வதக்கவும்.
இவை அனைத்தும் நன்கு வதங்கியதும் மி.தூள், ம.தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். அனைத்தும் நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது தண்ணீர் சேர்க்கலாம். 1 கப் மக்காச்சோள ரவைக்கு 2 கப் தண்ணீர் என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்தவுடன் உப்பு சரிபார்த்து ரவையை போட்டு நன்கு கிளறி குக்கரை மூடி போட்டு 2 விசில் விடவும். குக்கர் தம் அடங்கியதும் மூடியை திறந்து நன்கு கிளறி விடவும். பின்பு முந்திரியை நெய்யில் வறுத்து போட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான சத்தான கதக் பிரியாணி ரெடி.