”இந்து மதம் என்கினற் பெயர் ராஜராஜன் காலத்தில் இல்லை. சைவம், வைணவம் மற்றும் சமணம் தான் இருந்தது”. இந்து என்பது வெள்ளைக்காரன் வைத்த பெயர் என்றும் நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கிய கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் பாகம் 1 இந்த படம் அனைவரையும் கவர்ந்து மாபெரும் வெற்றி படமாகவும் வசூலிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகின்றது. இதனிடையே, நடிகர் கமல்ஹாசன் இன்று இந்தப் படத்தை சென்னை வேளச்சேரி ஃப்னிக்ஸ் மாலில், நடிகர்கள் விக்ரம் மற்றும் கார்த்தி ஆகியோருடன் அமர்ந்து திரையரங்கில் ரசித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கமல்ஹாசன், “தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது என நினைக்க தோன்றுகிறது. தமிழ் சினிமா கலைஞனாக இது எனக்கு பெருமிதம்கொள்ளும் நேரம். இந்த புத்துணர்ச்சி நீட்டிக்க வேண்டும். விக்ரம் பட சாதனையை இந்தப் படம் முறியடித்துள்ளது என்பது சந்தோசம் தான். அதைக் கொண்டாட தான் நான் இங்கு வந்துள்ளேன். ஆரோக்கியமான போட்டி இருப்பதில் தவறில்லை” என்று பேசினார்.

தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் ராஜராஜ சோழன் இந்து மதம் இல்லை என்று கூறிய கருத்து குறித்து கேள்விகேட்கப்பட அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “இந்து மதம் என்கிற பெயர் ராஜராஜ சோழன் காலத்தில் கிடையாது. சைவம், வைணவம், சமணம் என்றே இருந்தது. அப்போது மதங்கள் வெவ்வேறு இருந்தது” .
தமிழ் சினிமாவிற்கு நூறு வயது எனக்கு 67. இந்த நல்ல தருணத்தில் இவர்களுடன் சேர்ந்து வெற்றியை கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது ராஜ்கமல் பிலிம்ஸின் படமாக இருந்தால் தான் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று இல்லை. இது எங்கள் தமிழ் படம். இவர்களுடன் சேர்ந்து படம் பார்த்ததில் எனக்கு சந்தோஷம் என்றும் கூறினார்.