ஆஸ்கர்: இந்த ஆண்டுக்கான 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த மூன்று படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் தமிழ் ஆவண குறும்படமான ‘தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்’ திரைப்படமும், ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலும் இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதை வென்று 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. அதே போல் ஹாலிவுட் படமான ‘எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ திரைப்படம் 7 பிரிவுகளில் ஆஸ்கரை வென்று சாதனை படைத்துள்ளது.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த துணை நடிகர் ஆகிய 7 பிரிவுகளில் ‘எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ ஹாலிவுட் திரைப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. இது ஒரு அறிவியல் புனைக்கதை திரைப்படம். காமெடி ஜானரில் படம் உருவாகியுள்ளது. சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய பெண்ணை பற்றிய கதையிது. அவர் தனது கணவருடன் சலவைக் கடை நடத்தும் ஒரு சலவைத் தொழிலாளி. அப்போது அவர்களின் வாழ்க்கையை மாற்றிப்போடும் ஒரு சம்பவம் நடக்கிறது. பல்வேறு கிரகங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் அந்த பெண் சலவைத் தொழிலாளி சிக்குகிறார். அதன் பிறகு அவர் என்ன செய்கிறார் என்பதை சொல்கிறது இந்த படம்.