ஐஐடி ரோபர்: ஜவுளித் தொழிலில் துணியை தயாரிக்க பல்வேறு கட்டங்களில் தண்ணீர் அதிகளவில் தேவைப்படுகிறது. சாயமிடுதல் போன்ற பணிகளில் நீர் மாசடைதலும் அதிகளவில் உள்ளது. இந்த தண்ணீரை சுத்திகரிக்க வேண்டிய அவசியமுள்ளது. அதோடு தண்ணீரை சுத்திரகரிக்காமல் நீர் நிலைகளில் கொட்டுவதால் சுற்றுச்சூழல் மாசுபடும் அபாயமும் உள்ளது. இந்நிலையில் ஜவுளித்துறையில் தண்ணீரின் தேவையில் 90 சதவீதம் அளவுக்கு குறைக்கும் நானோ தொழில் நுட்பத்தை ஐஐடி ரோபர் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பை உருவாக்கிய நீல்கந்த் நிர்மல்கர் கூறுகையில், ‘ஒரு கிலோ பருத்தித் துணியை பதப்படுத்த 200 முதல் 250 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் எங்களின் காற்று நானோ குமிழி தொழில் நுட்பத்தில் 90 முதல் 95 சதவீத அளவுக்கு தண்ணீர் மற்றும் ரசாயன பயன்பாட்டையும், 90 சதவீத மின்சார சிக்கனத்தையும் செய்ய முடியும். இதில் பயன்படுத்தப்படும் நீர்க்குமிழிகள் மனித தலைமுடியை விட 10 ஆயிரத்தில் ஒரு பங்கு என மிகமிகச் சிறியதாகும். இவை தண்ணீரை விட துணிகளில் சிறப்பாக செயல்பட்டு ரசாயனங்களை திறம்பட கையாள்கிறது’ என்று அவர் கூறினார்.
நானோ குமிழி இயந்திரம் மூலம் பதப்படுத்திய பிறகு அந்த தண்ணீரை மீண்டும் பயன்படுத்தலாம் என்பது இதன் மற்றொரு சிறப்பம்சம். அணு அல்லது மூலக்கூறுகளின் பண்புகளை நானோ அளவில் மாற்றி புதிய பண்புள்ள பொருள்களை உருவாக்குவது தான் நானோ டெக்னாலஜி என்பது குறிப்பிடத்தக்கது.