கார்த்தி 25: கார்த்தியின் 25வது படமான ‘ஜப்பான்’ படத்தின் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் ஏற்கனவே ‘துப்பறிவாளன்’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ ஆகிய படங்களில் நடித்துள்ள அனு இம்மானுவேல் ஹீரோயினாக நடிக்க உள்ளார். தற்போது இவர் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.
இப்படத்தை கடந்த 2016ல் வெளியாகி தமிழில் சிறந்த படத்துக்கான தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ படத்தை இயக்கிய ராஜீ முருகன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே தமிழில் குக்கூ, ஜிப்ஸி போன்ற படங்களை இயக்கி இருந்தார். தற்போது ‘ஜப்பான்’ படத்தை எழுதி இயக்குகிறார்.
தெலுங்கில் காமெடி வேடங்களிலும், ஹீரோவாகவும் நடித்த சுனில், அல்லு அர்ஜீன் நடித்த ‘புஷ்பா’ படத்தில் ‘மங்களம் சீனு’ என்ற கேரக்டரில் வில்லனாக நடித்து பான் இந்தியா நடிகராகிவிட்டார். தற்போது சுசீந்திரன் இயக்கும் ‘வள்ளி மயில்’ படத்தில் நடிக்கும் சுனில், அடுத்து ‘ஜப்பான்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
கடந்த 25 வருடங்களாக ஒளிப்பதிவாளராகவும் மற்றும் தமிழில் ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’, ‘கோலிசோடா’, ‘பத்து எண்றதுக்குள்ள’, ‘கடுகு’, ‘கோலி சோடா 2’, கன்னடத்தில் ‘பைராஹி’ ஆகிய படங்களின் மூலம் இயக்குனராகவும் பணியாற்றிய எஸ்.டி.விஜய் மில்டன் தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் விஜய் மில்டன் ஜப்பான் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதன் மூலம் இவர் நடிகராகவும் அறிமுகமாக உள்ளார்.
ஜப்பான் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் தூத்துக்குடியில் தொடங்குகிறது.