மாண்டஸ் புயல்: வங்ககடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் எதிரொலியால் சென்னை உட்பட பல வடதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் சென்னை மாநகரில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்று வீசுவதால் வாகனங்களை இயக்குவதிலும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வியாபாரிகள் காய்கறிகள் வாங்க வர முடியாததால் கோயம்பேடு காய்கறிகள் மார்க்கெட்டில் 2000 டன் காய்கறிகள் விற்காமல் தேக்கமடைந்துள்ளன. இந்த மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 5000 டன் அளவிலான காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் வியாபாரிகளால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாலையில் இருந்தே காய்கறிகள் வியாபாரம் குறைந்த அளவே காணப்படுகிறது. பல ஆயிரம் கிலோ காய்கறிகள் தேக்கமடைந்துள்ளதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மிகவும் வேதனையடைந்துள்ளனர். காய்கறிகள் தேக்கமடைந்ததால் காய்கறிகளின் விலையும் சரிவடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று ரூ.12க்கு விற்கப்படுகிறது. வெங்காய விலை ரூ. 22லிருந்து ரூ. 14க்கு விற்கப்படுகிறது. முட்டைகோஸ் ரூ.6க்கும், பீன்ஸ் ரூ.15க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.