இலங்கையில் தற்போது மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து விதமான பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவில் உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் பல மாதங்களாக சாலையில் இறங்கி பல போராட்டங்கள் நடத்திய வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பலவிதங்களில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க திட்டம் தீட்டினார். ஆனால் பலனளிக்கவில்லை.
இலங்கையில் உணவுப் பொருட்கள், மருந்து மாத்திரைகள், பெட்ரோல், டீசல் என மிகவும் அத்தியாவாசிய பொருட்களின் விலையும் மக்கள் வாங்க முடியாத அளவில் விலை உயர்ந்து உள்ளது.

இதன் காரணமாக இலங்கையில் உள்ள மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக அதிகளவில் புலம் பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இலங்கைக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை இந்திய அரசும் தமிழக அரசும் உதவி செய்து வருகிறது.
எரிபொருள் பற்றாக்குறை, பலமணி நேர மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல், ஊழியர்கள் வேலை நிறுத்தம் என தீவு முழுவதும் இயல்புநிலை முடங்கி இருக்கிறது.
இந்நிலையில் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் அந்நாட்டு மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக போலீஸ்துறை சார்பில் ரூ.1.34 கோடியும் இந்திய போலீஸ் பணி அதிகாரிகள் சங்கம் சார்பில் ரூ.6.63 லட்சமும் என மொத்தம் ரூ.1.40 கோடி நிதி பெறப்பட்டது. இந்த நிதிக்கான காசோலையை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வரிடம் தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு கொடுத்தார்.
தற்போது இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியாலும் பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தாலும் மக்கள் சைக்கிள் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் காரணமாக இலங்கையில் தற்போது ஓரு புதிய சைக்கிள் விலை ரூபாய் 1 லட்சத்தைத் தாண்டி விற்கப்படுகிறது.