உகாண்டா: உகாண்டாவின் கட்வே கபடோரா நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இகாபால் என்ற 2 வயது சிறுவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது திடீரென்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஏரியில் இருந்து வந்த ஒரு நீர்யானை சிறுவனை கவ்விப் பிடித்துள்ளது. அது தனது பெரிய தாடைகளால் அச்சிறுவனை விழுங்க ஆரம்பித்திருக்கிறது. அதை ஏரிக்கரையில் இருந்த ஒரு நபர் பார்த்திருக்கிறார். அவர் உடனடியாக சிறுவனை காப்பாற்றும் நோக்கத்தில் அருகில் இருந்த கற்களை எல்லாம் எடுத்து அந்த நீர்யானை மீது தூக்கி வீசியுள்ளார். இதனால் பாதி விழுங்கிய சிறுவனை அந்த நீர்யானை தரையில் துப்பிவிட்டு மீண்டும் ஏரிக்குள் சென்றுவிட்டது.
இதனையடுத்து அக்கம்பக்கத்தார் அச்சிறுவனை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக உகாண்டா போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட சிறுவனின் கையில் மட்டும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு தற்போது அவன் உடல் நிலை தேறி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஏரிக்கரையில் நீர்யானை தாக்குதல் நடத்திய சம்பவம் இதுவே முதல் முறை என்கின்றனர் அப்பகுதி மக்கள். பொதுவாக தாவரங்களை மட்டுமே உண்ணக்கூடிய நீர்யானைகள் சிறுவனை விழுங்க முயன்றது குறித்து வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நீர்யானைகள் அச்சுறுத்தப்படும்போது மிகவும் ஆக்ரோஷத்துடன் காணப்படும் என்கின்றனர் வனத்துறை ஆர்வலர்கள்.