IND VS SA T20: இநதியா மற்றும் தென் ஆப்ரிக்காவுடனான மூன்றாவது ஆட்டத்தில் இந்திய அணியினரின் தொடர் விக்கெட் இழப்பால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதற்கு முன்னர் விளையாடிய இரு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுயிருந்தது குறிப்பிடத்தக்கது.
இம்மாதம் 20 ஓவர் உலக கோப்பை போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் அணியின் ப்ளேயிங் லெவனில் வீரர்களின் நிலையை அறிய ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்காவுடனான T20 போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்திய மண்ணில் வந்து விளையாடிய ஆஸ்திரேலியா 1-2 என்ற நிலையில் தோல்வியுற்றது.
அதனை தொடர்ந்து தென் ஆப்ரிக்காவுடனான போட்டிகள் இந்திய மண்ணில் நடைபெற்றது. முதல் போட்டிகளிலிருந்தே இந்திய அணி வீரர்களின் ஆதிக்கம் இருந்து வந்த நிலையில் 2 போட்டிகளில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. ஆனால், நேற்று மூன்றாவது போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 49 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்தது.

இந்தூர் மைதானத்தில் தொடங்கிய மூன்றாவது போட்டியில் முதலாவதாக டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் பவுலிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கிற்கு சாதகமான இந்தூர் ஆடுகளத்தில் பவர்பிளே முடிவதற்குள்ளாகவே தென்னாபிரிக்க கேப்டன் பவுமா தனது விக்கெட்டை பறிகொடுத்தாலும் டி காக் – ரூஸோவ் இணைந்து வானவேடிக்கை நிகழ்த்தினர். இவர்கள் கூட்டணியை பிரிக்க இந்திய பவுலர்கள் முயன்றும் பலனில்லை.
13வது ஓவரின்போது 68 ரன்கள் எடுத்திருந்த டி-காக் ரன் அவுட் செய்யப்படவே இவர்கள் இணை பிரிந்தது. இதன்பின் ரூஸோவ் 48 பந்துகளில் சதம் அடித்தார். அவரின் சதத்தின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு தென்னாபிரிக்க அணி 227 ரன்கள் குவித்தது.
228 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆட்டத்தின் இரண்டாவது பந்தே அதிர்ச்சி காத்திருந்தது. ரபாடா வீசிய முதல் ஓவரில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா போல்டாகி வெளியேறினார். அதற்கடுத்த ஓவரிலேயே ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு ரன்னுக்கு நடையைக்கட்டினார். ரிஷப் பந்த் 27 ரன்களுக்கு அவுட் ஆனார். வந்த முதல் பந்தில் இருந்தே அதிரடியை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக் மளமளவென ரன்களை குவித்தார். அதேநேரம் அவசரப்பட்டு விக்கெட்டையும் பறிகொடுத்தார்.
கேசவ் மகாராஜ் ஓவரில் ஸ்வீப் ஆட முயன்று போல்டானார். 21 பந்துகளில் தலா 4 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் அவர் 46 ரன்கள் எடுத்திருந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் ஒரு சிக்ஸ் மட்டும் அடித்துவிட்டு அடுத்த ஓவரே பெவிலியன் திரும்பினார். இப்படி, 8 ஓவர் முடிவில் அனைத்து முன்னணி விக்கெட்டையும் இழந்து இந்திய அணி தடுமாறியது.
இதன்பின் வந்த தீபக் சஹார் 31 ரன்கள் எடுத்தார். இறுதியில் 18.3 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்து 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தென்னாபிரிக்க அணி தரப்பில் டுவைன் பிரிட்டோரியஸ் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.