ICC T20 WORLD CUP 2022: டி20 உலக கோப்பைக்கு இந்திய அணி சார்பில் விளையாடும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது இந்திய கிரிக்கெட் வாரியம்.
ஆசிய கோப்பைக்கான போட்டியில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியுடன் மோதிய போட்டிகளில் தோல்வியை சந்தித்து இறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் போனது. ஆசிய கோப்பை போட்டியில் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியும் இலங்கை அணியும் மோதி பெரும் பரப்பரப்பான ஆட்டத்தின் முடிவில் பாகிஸ்தான் அணியை வென்று இலங்கை கோப்பையை 6வது முறையாக வெ்ன்று அசத்தியது.
இந்நிலையில், 7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 12 அணிகள் இதில் விளையாடவுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதேபோல் முதல் சுற்றில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 நாடுகளில் தகுதி பெறும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி சுற்றுக்கு முன்னேறும்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள போட்டிக்காக இப்போதே பல்வேறு நாடுகள் தங்கள் அணியை வலுப்படுத்த தொடங்கியுள்ளன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் தங்களது அணியை அறிவித்துள்ளன.
இந்த நிலையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷால் பட்டேல் உள்ளிட்டோர் அணிக்கு திரும்பியுள்ளனர். இதேபோல் அஸ்வின், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோரும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணி : ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் ( துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஆர்.அஸ்வின், சஹால், அக்ஷர் பட்டேல், பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதேபோல் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில், தீபக் சஹார், முகமது ஷமி, ஸ்ரேயஸ் ஐயர், ரவி பிஸ்னோய் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.