ரோகித் சர்மா: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. சிட்னியில் நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நாளை மறுநாள் நடைபெறும் மற்றொரு அரையிறுதிப்போட்டி அடிலெய்டில் நடக்க இருக்கிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய அணி வீரர்கள் மெல்போர்னில் இருந்து அடிலெய்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் அரையிறுதிப் போட்டிக்காக தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வலது கையில் பந்து மோதி காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரோகித் வலியால் அலறி துடித்தார். பின்னர் ரோகித் சர்மா சிறிது நேரம் ஓய்வு எடுத்து பின்னர் மீண்டும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அரையிறுதிக்கு இன்னும் 48 மணி நேரம் மட்டுமே உள்ள நிலையில் ரோகித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காயத்தால் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் அவர் போட்டியிலிருந்து விலகும் நிலை ஏற்படும் என்பதால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.