ரிக்கி கேஜ்: திரையுலகில் ஆஸ்கரை போல, இசையுலகில் கிராமி விருதுகள் மிக பிரபலமானது. இந்த ஆண்டுக்கான கிராமி விருதுகள் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் பெஸ்ட் இம்மெர்சிவ் ஆடியோ ஆல்பம் என்ற பிரிவில் ‘டிவைன் டைட்ஸ்’ இசை ஆல்பம் கிராமி விருது பெற்றது. இந்த ஆல்பத்துக்கு இசையமைத்தவர் பெங்களூரை சேர்ந்த ரிக்கி கேஜ். இந்த ஆல்பத்தை லஹரி மியூசிக் தயாரித்துள்ளது.
இதற்கு முன் இரண்டு முறை கிராமி விருதுகளை ரிக்கி கேஜ் பெற்றுள்ளார். இதையடுத்து அவர் கிராமி விருதுகள் பெற்றதில் ஹாட்ரிக் அடித்துள்ளார். இதற்கு முன் எந்த இந்திய இசையமைப்பாளரும் 3 முறை இந்த விருதை பெற்றதில்லை. இந்திய இசைக் கலைஞர்கள் பண்டிட் ரவிசங்கர், ஜாகிர் ஹூசேன், விக்கு விநாயகராம், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் கிராமி விருதுகளை வென்றுள்ளனர்.
இதற்கு முன் 2015ல் ‘விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா’ ஆல்பத்துக்காக கிராமி விருது பெற்றுள்ள ரிக்கி கேஜ், அமெரி்க்காவில் பிறந்த இந்தியர். பின்னர் பெங்களூரில் படித்து பல் மருத்துவரானார். இந்துஸ்தானி இசை மீதான காதலால் அவர் இசையை கற்றுக்கொண்டு பெங்களூரிலேயே இசை ஆல்பங்களை உருவாக்கி வந்தார்.
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘இப்போது தான் எனது 3வது கிராமி விருதை பெற்றுள்ளேன். நன்றிகள், வார்த்தைகளற்று நிற்கிறேன். இந்த விருதினை இந்தியாவுக்கு சமர்ப்பிக்கிறேன்’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.