இந்திய அணியின் தமிழக கால்பந்தாட்ட வீராங்கனை மாரியம்மாளுக்கு இடது கால் மூட்டு சவ்வுக்கு பதிலாக உயிருள்ள ஓருவருரிடமிருந்து சவ்வு எடுத்து அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து மருத்துவத்துறை புதிய சாதனை செய்துள்ளது.
உலகத்தில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து. அதேபோல், பன்னாட்டு சங்கம் நடத்தும் (ஃபிபா) கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு விளையாடுவது ஓவ்வொரு கால்பந்தாட்ட வீரரின் லட்சியம் மற்றும் கனவாகும்.
அதே கனவோடும் லட்சியத்தோடும் நம் தமிழகத்திலிருந்து நாமக்கலைச் சேர்ந்தவர் மாரியம்மாள் களம் கண்டவர். 2020 ஆம் ஆணடு இந்தியாவில் ஃபிபா நடத்தும் 17 வயது உட்பட்டோருக்கான உலககோப்பை கால்பந்தாட்டத்தில் இந்திய அணிக்காக கலந்து கொண்டார்.

இவர் இந்த ஆண்டு ஈரானில் நடந்த ஆசிய கால்பந்து லீக் போட்டியிலும், கடந்த 2021-ம் ஆண்டு பிரேசில் மற்றும் சுவீடன் நாட்டில் நடந்த நட்பு ரீதியான கால்பந்து போட்டிகளிலும் பங்கேற்று 12 கோல்கள் அடித்துள்ளார்.
மாரியம்மாள் கடந்த 8 வருடங்களாக கால்பந்து விளையாடி வருகிறார். தனது இளம் வயதில், சகோதரனை பார்த்து கால்பந்து ஆட கற்றுக்கொண்டதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பெங்களூருவில் நடந்த ‘கேலோ-இந்தியா’ போட்டிக்காக சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாரியம்மாள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு இருந்தார்.
பயிற்சி மேற்கொள்ளும் போது இடது காலின் முட்டியில் உள்ள சவ்வு கிழிந்தது. இதனால் அவர் மிகவும் அவதியடைந்தார். அவர் ஒமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூட்டு உள்நோக்கி கருவி துறை, விளையாட்டு காயத்துறையின் தலைவர் டாக்டர் லெனார்டு பொன்ராஜ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் உதவியுடன், கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது நலமுடன் உள்ளார்.
இவருடைய தந்தை பாலமுருகன் தன்னுடைய மகளுக்காக தனது கால் முட்டியின் சவ்வை தானமாக வழங்கியுள்ளார். உயிருள்ளவரிடமிருந்து முட்டி சவ்வை எடுத்து வேறு ஒருவருக்கு பொருத்தியது இந்தியாவில் இதுவே முதல் முறை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.