ஐஸ்வர்யா லட்சுமி: பொன்னியின் செல்வன் படத்தில் ‘பூங்குழலி’ கேரக்டரில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி இந்த ஆண்டில் 9 படங்களில் நடித்து அதிகமான படங்களில் நடித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் அறிமுகமான அவர், அங்கு ‘மாயநதி’, ‘வரதன்’, ‘பிரதர்ஸ் டே’ உள்பட பல படங்களில் நடித்தார். விஷால் நடித்த ‘ஆக்ஷன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பிறகு ‘ஜகமே தந்திரம்’ படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்தார். இந்த ஆண்டு அவர் தமிழில் ‘புத்தம் புது காலை விடியாதா’, ‘கார்கி’, ‘பொன்னியின் செல்வன்’, ‘கேப்டன்’, ‘கட்டா குஸ்தி’ ஆகிய படங்களில் நடித்தார். மலையாளத்தில் ‘அர்ச்சனா 31 நாட் அவுட்’, ‘குமாரி’ ஆகிய படங்களிலும், தெலுங்கில் ‘அம்மு’, ‘கோட்சே’ ஆகிய படங்களிலும் நடித்தார். ஆக இந்த ஆண்டு மட்டும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த 9 படங்கள் வெளியாகியுள்ளது.
இதில் கார்கி, குமாரி ஆகிய படங்களை ஐஸ்வர்யா லட்சுமி தயாரித்திருந்தார். ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் அவர் ஏற்று நடித்த ‘பூங்குழலி’ கேரக்டர் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. தற்போது அவர் ‘பொன்னியின் செல்வன்’ 2ம் பாகம் மற்றும் மலையாளத்தில் ‘கிறிஸ்டோபர்’, ‘கிங் ஆஃப் கோதா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதுகுறித்து ஐஸ்வர்யா லட்சுமி கூறுகையில் ‘ஒரே ஆண்டில் 9 படங்கள் என்பது கனவிலும் நினைத்திராத ஒன்றாகும். இது எப்படி நடந்தது என்று எனக்கே தெரியவில்லை. எல்லாம் அந்த இறைவனின் செயல்’ என்றார்.