ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘ஜெயிலர்’. இது ரஜினிகாந்தின் 169வது படமாகும். இதை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். இந்த படத்தை அடுத்து 170வது படத்தில் நடிக்கிறார் ரஜினி. சூர்யா, விவேக் ஓபராய் நடித்த ‘ரத்த சரித்திரம்’, நாகார்ஜூனாவுடன், பிரகாஷ் ராஜ் நடித்த ‘பயணம்’, பிரகாஷ் ராஜ் தயாரித்து நடித்து இயக்கிய ‘தோனி’ ஆகிய படங்களுக்கு திரைக்கதை, வசனத்தில் உதவிய த.செ.ஞானவேல், பிறகு அசோக் செல்வன் நடித்த ‘கூட்டத்தில் ஒருவன்’ சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ ஆகிய படங்களை எழுதி இயக்கினார். இதில் ‘ஜெய் பீம்’ படம் பல்வேறு விருதுகள் வென்று திரையுலகம் மட்டும் இன்றி அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இப்படத்தைப் பார்த்து த.செ.ஞானவேலை பாராட்டிய ரஜினிகாந்த் அவரது இயக்கத்தில் நடிக்க கதை கேட்டு ஓகே செய்தார். இப்படம் ரஜினிகாந்த் நடிக்கும் 170 வது படமாக நேற்று அறிவிப்பு வெளியாகி, த.செ.ஞானவேல் இயக்குவதை லைகா புரொடக்ஷ்ன்ஸ் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் உறுதி செய்துள்ளார். அடுத்த ஆண்டு திரைக்கு வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கிடையே தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கும் படம் ‘லால் சலாம்’. இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஹீரோக்களாக நடிக்கின்றனர். ரஜினிகாந்தின் தங்கை வேடத்தில் ஜீவிதா ராஜசேகர் நடிக்கிறார்.