அகிலன்: கடந்த 2015ல் ஜெயம் ரவி, திரஷா நடித்த ‘பூலோகம்’ படத்தை இயக்கியவர் என்.கல்யாணகிருஷ்ணன். மீண்டும் அவரது இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘அகிலன்’. இப்படத்தில் ஹீரோயின்களாக பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளனர். விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். சுந்தர் தயாரித்துள்ளார். வருகிற 10ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இப்படத்தையும் மணிரத்னம் இயக்கத்தில் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ம் பாகத்தையும் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக ஜெயம் ரவி கூறியுள்ளார். மேலும் அகிலன் படம் குறித்து அவர் கூறியதாவது.
‘அகிலன்’ மிகவும் கஷ்டமான படம். துறைமுகத்தை மையமாக வைத்து மாஃபியா படமாக உருவாக்கப்பட்டுள்ளது. நடுக்கடலில் சண்டைக் காட்சி படமாகியுள்ளது. வெயில், உப்புத் தண்ணீர் என்று எல்லா சிரமங்களையும் கடந்து இக்காட்சியைப் படமாக்கினோம். எனது கேரக்டர் சற்று எதிர்மறையாக இருக்கும். தோற்றத்திலும் லேசான மாற்றம் இருக்கும் என்று அவர் கூறினார்.
மேலும் இப்படம் நெய்தல் நிலம் சார்ந்த கதை என்றும், இதில் ஜெயம் ரவி கடற்கொள்ளையனாக எதிர்மறை கேரக்டரில் நடித்திருப்பதாகவும், பிரியா பவானி சங்கர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தான்யா ஒரு சர்ப்ரைஸான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.