ஆளவந்தான்: கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த படம் ஆளவந்தான். இப்படத்தில் ரவீனா டன்டன், மனிஷா கொய்ராலா உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து இருந்தார். நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி இந்த படத்தை அப்போதே கமல்ஹாசன் வித்தியாசமாக எடுத்திருந்தார். இதற்காக அதிக பட்ஜெட் ஆனது. ஆனால் அப்போது படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
ஆனால் தொழில் நுட்ப ரீதியாக இந்த படத்தை இப்போது பார்த்தாலும் பலரும் பிரமித்துப் போகிறார்கள். அந்த அளவுக்கு இதில் தாெழில் நுட்பத்திற்காக கமல்ஹாசன் அவ்வளவு மெனக்கெட்டிருந்தார். இந்த படத்தில் விஎஃப்எக்ஸ் பணிகளை ஆஸ்திரேலியாவை சேர்ந்த கட்டிங் யெட்ஜ், ஜான், பீட்டர் மஜ்டன் கவனித்தனர். ஸ்டன்ட் காட்சிகளை ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிராண்ட் பேஜ் வடிவமைத்தார்.
ஹாலிவுட்டில் பணியாற்றிய ஸ்காட், இன்ஜ்லிஸ் மோஷன் கன்ட்ரோல் கேமராவை படத்தில் கையாண்டார். இது போல் ஹாலிவுட் மற்றும் வெளிநாட்டு கலைஞர்களின் பங்கும் இந்த படத்தில் அதிகமாக இருந்தது. இந்நிலையில் இந்த படத்தை புதிய டிஜிட்டல் ஒலி அமைப்பில் மீண்டும் திரையிட உள்ளதாக தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் ஆயிரம் தியேட்டர்களில் இந்த படம் ரீரிலிஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.