எமர்ஜென்சி: இந்தியில் பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் கங்கனா ரெனாவத். அவர் தமிழில் ஜெயம் ரவி நடித்த ‘தாம்தூம்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். நடிகைகள் நடிக்க தயங்கும் சில கதாபாத்திரங்களில் அவர் போல்டாக நடித்துள்ளார். அதுபோல அவர் ஜான்சி ராணி வேடமிட்டு நடித்த படம் ‘மணிகர்னிகா’. இந்த படத்தை அவரே இயக்கியிருந்தார். அதன் பிறகு அவர் மறைந்த முதலமைச்சர் ‘ஜெயலலிதா’ கேரக்டரில் ‘தலைவி’ படத்தில் நடித்தார். தற்போது அவர் ‘எமர்ஜென்சி’ படத்தில் மறைந்த பிரதமர் ‘இந்திரா காந்தி’ வேடம் ஏற்றுள்ளார். இந்த படம் எமர்ஜென்சி காலத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் பற்றிய கதையாக உருவாகிறது. இந்த படத்தில் நடிப்பதுடன் அவரே இந்த படத்தை இயக்கவும் செய்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் சில காட்சிகளை நாடாளுமன்றத்தில் படமாக்க வேண்டுமென்றும் அப்போதுதான் அந்த காட்சிகள் யதார்த்தமானதாக இருக்கும் என்றும் கங்கனா நாடாளுமன்ற செயலருக்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியிருக்கிறார். இதற்கிடையே கங்கனாவுக்கு இந்திரா காந்தியாக நடிக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கங்கனா பாஜவின் கைப்பாவை. அவர் பாஜக சொல்வது போல் ஆடுபவர். அவர் இந்திரா காந்தியாக நடிக்கிறார் என்றால் அதில் விஷமம் இருக்கும். அதனால் அவரது படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம், என ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.