சந்திரமுகி 2: கடந்த 2005ல் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற வைகைப்புயல் வடிவேலுவின் காமெடி சீன்ஸ் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது. இப்படத்தின் 2ம் பாகமான ‘சந்திரமுகி 2’ படத்தை பி.வாசு இயக்க திட்டமிட்டிருந்தார். அதில் ரஜினிகாந்த் நடிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் 17 வருடங்களுக்கு பிறகு ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் படம் உருவாக்கப்படும் என்று பி.வாசு அறிவித்தார். ஆனால் இதில் ரஜினி நடிக்கவில்லை.
அவருக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.பாகுபலி 1, பாகுபலி2, ஆர் ஆர் ஆர் படங்களுக்கு இசையமைத்த எம்.எம். கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கிறார். மைசூர் உள்ளிட்ட அரண்மனை பகுதிகளில் ஷீட்டிங் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ‘சந்திரமுகி 2’ படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகாவுடைய கேரக்டர் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. இப்போது சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகா கேரக்டரில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். ஏற்கனவே அவர் தமிழில் வெளியான ‘தாம் தூம்’, ‘தலைவி’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் உள்பட பல மொழிகளில் ‘சந்திரமுகி 2’ வெளியாகும் என்று லைகா புரொடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது. ரிலீஸ் தேதி இன்னும் வெளியாகவில்லை.