காந்தாரா: கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள ‘காந்தாரா’ திரைப்படத்தின் தமிழ் வெர்ஷன் வரும் அக்டோபர் 15ம் தேதி ரிலீசாகிறது. இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி கன்னட மொழியில் மட்டும் காந்தாரா திரைப்படம் வெளியானது. இப்படத்தின் இயக்குனரே இப்படத்தில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். கிஷோர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் கன்னடத்தில் வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது. நிலம் மீதான அதிகாரம், சாதிய ஒடுக்குமுறை இவற்றுடன் அந்த இடத்துக்கான கலைகள், நாட்டார் தெய்வ வழிபாடு ஆகியவற்றுடன் இணைத்து கமர்ஷியல் திரைப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரிஷப் ஷெட்டி. கன்னட மொழியிலேயே மற்ற மாநிலங்களில் வெளியாகி அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால், மற்ற மொழிகளில் இந்த திரைப்படத்தை கே.ஜி.எஃப் படம் போல் டப் செய்து வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் காந்தாரா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் வரும் அக்டோபர் 15ம் தேதி ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இப்படத்தின் தமிழ் டப்பிங் டிரெய்லர் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தி இப்படத்தின் டிரெய்லரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கே.ஜி.எஃப் படத்தை தயாரித்த ஹம்பல் பிலிம்ஸ் நிறுவனம்தான் இப்படத்தையும் தயாரித்துளளது. தமிழகத்தில் ட்ரீம் வாரியர் நிறுவனம் இந்தப் படத்தை இணைந்து வெளியிடுவதாக தெரிகிறது. கன்னடத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் இப்படத்திற்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு உருவாகியுள்ளது. குறைந்த பட்சம் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஹவுஸ்புல் காட்சிகளாக ஓட வாய்ப்புள்ளது. காந்தாரா திரைப்படம் கன்னடத்தை தொடந்து தமிழ் மொழியிலும் தனது வசூல் வேட்டையை தொடரும் என்று நம்பப்படுகிறது.