காந்தாரா: ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்துள்ள காந்தாரா கன்னட திரைப்படம் கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்படம் அனைத்து மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் இளைஞனின் கதை இது. இப்படம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வந்தது. இப்படத்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. கன்னட படமாக இப்படம் முதல் வாரத்தில் 50 கோடி வசூலித்து, பாக்ஸ் ஆபிஸில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால் இப்படத்துக்கு மற்ற மாநிலங்களிலும் டிமாண்ட் ஏற்பட்டது. உடனடியாக இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
வெறும் 10 கோடியில் தயாரிக்கப்பட்டு வெளியான இப்படம் உலகம் முழுவதும் கன்னடத்தில் 128 கோடி வசூலித்துள்ளது. அடுத்ததாக இந்தியில் 30 கோடியும், தெலுங்கில் 21 கோடியும் வசூலித்துள்ளது. தமிழில் 14 கோடி, மலையாளத்தில் 8 கோடி வசூலித்துள்ளது. மொத்தமாக இதுவரை 201 கோடி வசூலை இந்த படம் பார்த்துள்ளது. காந்தாரா வெளியான அதே நாளில் வெளியான படம் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன். காந்தாரா படம் மக்கள் வரை சென்றடைய சில நாட்கள் ஆனது. அதற்குள் பொன்னியின் செல்வன் படம் 400 கோடி வசூலை விரைவாக குவித்துவிட்டது. ஆனால், அதற்கு பிறகு பொன்னியின் செல்வன் வசூலை குவிப்பதில் தடுமாற காந்தாரா படம்தான் காரணம். பொன்னியின் செல்வன் படத்துக்கு வட இந்தியாவிலும், ஆந்திரா, தெலுங்கானாவிலும் மற்றும் உலக மார்க்கெட்டிலும் கடுமையான சவாலாக காந்தாரா படம் அமைந்துவிட்டது என டிரேட் ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் தெரிவித்துள்ளார்.