ஜெயிலர்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஜெயிலர். இந்த படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உள்பட பலர் நடிக்கின்றனர். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். நிர்மல் படத்தொகுப்பு செய்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எந்திரன், பேட்ட, அண்ணாத்த படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தும் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் மீண்டும் இணைந்துள்ளது. இதனால் இப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் விஜய்யின் பீஸ்ட் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் நெல்சன் மீண்டும் சன்பிக்சர்சுடன் இணைந்து இந்த படத்தில் பணியாற்றுகிறார்.
ரஜினியும் இயக்குனர் நெல்சனும் இணையும் முதல் படமிது. இந்த காரணங்களால் இந்ந படத்துக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் நேற்று சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஸ்டில் ஒன்றை வெளியிட்டது. இதில் கன்னட சூப்பர் ஸ்டாரும் மறைந்த புனித் ராஜ்குமாரின் அண்ணனுமான சிவராஜ்குமார் இருக்கிறார். இதனால் இப்படத்தில் இவர் முக்கிய வேடத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த புகைப்படம் வெளியாகி சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலானது. ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்தனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.