காரைக்குடி: பிளஸ் 1 படிக்கும் காரைக்குடியை சேர்ந்த பிரனேஷ் என்ற மாணவர் செஸ் போட்டியில் வல்லவர். அவர் மாவட்ட, மாநில, தேசிய, ஆசிய மற்றும் சர்வதேச அளவில் 600க்கும் மேற்பட்ட செஸ் போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த தேசிய அளவிலான போட்டியின் யு-16 பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். பின்பு பிரான்சில் நடந்த கிராண்ட் மாஸ்டர் போட்டியில் முதல் இடம் பிடித்தார். மேலும் இலங்கையில் நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்காக தங்கம் வென்றுள்ளார்.
தற்போது ஸ்வடனில் டிசம்பர் 27 முதல் ஜனவரி 5 வரை நடந்த கிராண்ட் மாஸ்டர் போட்டியில் 9க்கு 8 புள்ளி எடுத்து இந்திய அளவில் 79வது கிராண்ட் மாஸ்டர் பட்டமும் தமிழ்நாடு அளவில் 28 வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும் வென்று பிரனேஷ் சாதனை படைத்துள்ளார். செஸ் போட்டியில் 2,500 பாயின்ட் எடுத்தால் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறலாம் என்ற நிலையில் பிரனேஷ் 2,504 பாயின்ட்டுகள் பெற்று கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.