கார்த்தி: விஜய் சேதுபதி நடித்த ‘சூது கவ்வும்’ படத்தை இயக்கியவர் நலன் குமாரசாமி. இவர் சூர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் அடுத்தடுத்த படங்களில் சூர்யா பிசியாகிவிட்டார். இதனால் சூர்யா, நலன் குமாராசாமி இணையும் படம் தாமதமாகி வருகிறது. இந்நிலையில் கார்த்தி நடிப்பில் படம் இயக்கும்படி நலனுக்கு சூர்யா அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ‘ஜப்பான்’ படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜு முருகன் இயக்கி வருகிறார். இந்த படம் முடிந்ததும் நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார்.
சூர்யாவுக்காக நலன் குமாரசாமி எழுதி வைத்திருந்த கதையில்தான் கார்த்தி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரலில் கார்த்தி நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படம் வெளியாகிறது. வரும் செப்டம்பர் மாதம் ‘ஜப்பான்’ திரைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நலனுடன் கார்த்தி இணையும் படம் அடுத்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.