கீர்த்தி சனோன்: ராமாயணத்தை மையப்படுத்தி பான் இந்தியா படமாக ‘ஆதிபுருஷ்’ உருவாகிறது. ராமராக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சயீப் அலிகான் நடிக்கின்றனர். இந்நிலையில் கீர்த்தி சனோன் ரசிகர்களுக்கு கூறியதாவது, ‘திரையுலகில் நடிக்க வந்த புதிதில் என்னை ஒரு நடிகையாக நிலைநிறுத்திக் கொள்ள வழி தெரியாமல் கண் கலங்கிய தருணங்களை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். முதலில் நம்மீது நாம் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். நண்பர்கள், உறவினர்கள், போன்றோருடன் பேச பலமுறை யோசிக்கிறோம். நம்முடன் பேசும் விஷயத்தில் மட்டும் கடுமையாக நடந்து கொள்கிறோம். இது ஏன் என்று தெரியவில்லை.
முதலில் நாம் நம்மிடம் மனம்விட்டு பேச வேண்டும். ஒரு கேரக்டரில் நடித்து முடித்த பின்பு இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று யோசிக்க வேண்டும். இதனால் தேவையில்லாத விமர்சனங்களை நாம் தவிர்க்க முடியும். மற்றவர்களுக்கு நல்ல நண்பனாக இருப்பதற்கு முன்பு முதலில் நீங்கள் உங்களுக்கு நல்ல தோழனாக, தோழியாக இருக்க வேண்டும். நம்மீது நாம் செலுத்தும் அன்பு மட்டுமே 100 சதவிகிதம் தூய்மையானது என்பதை நன்கு புரிந்து கொள்ளுங்கள். எவ்வளவு கடினமான விஷயத்தையும் சாதிக்க முடியும் என்று நம்புங்கள். பிறகு நம் வெற்றி தொடர்ந்து வரும்’ என்று அவர் திடீர் அட்வைஸ் செய்துள்ளார்.