கீர்த்தி சுரேஷ்: ‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வராலாறான ‘மகாநடி’ படத்தில் நடித்து தேசிய விருது பெற்று அசத்தினார் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து அவர் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்று வருகிறார். சமீபத்தில் அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கிய ‘சாணிகாகிதம்’ படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் நடித்தார்.
தற்போது கீர்த்தி சுரேஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ‘மாமன்னன்’ படத்திலும், தெலுங்கில் நானிக்கு ஜோடியாக ‘தசரா’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் ‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்து ஹோம்பலே நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் கீர்த்தி சுரேஷின் புதிய பட போஸ்டரை வெளியிட்டு “புரட்சி குடும்பத்தில் இருந்துதான் தொடங்குகிறது. தயாராகுங்கள்” என தமிழில் பதிவிட்டுள்ளது.
இந்த படத்திற்கு ‘ரகு தாத்தா’ என பெயரிடப்பட்டுள்ளது. படக்குழுவுடன் எடுத்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த கீர்த்தி சுரேஷ், பாக்யராஜின் ‘இன்று போய் நாளை வா’ படத்தில் பிரபலமான வசனமான ‘ஏக் காவுமே ஏக் கிஸான் ரகுதாத்தா’ என்பதை இந்தியில் பதிவிட்டுள்ளார். புதியவர் சுமன் குமார் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். சாணிகாகிதம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த யாமினி யக்னா மூர்த்தி இதற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் திரைக்கு வர உள்ளது.