லண்டன்: நீண்ட நாள் இங்கிலாந்து ராணியாக இருந்த ராணி 2ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலமானார். இதையடுத்து அவரது 74 வயது மகன் சார்லஸ் இங்கிலாந்து மன்னராக பொறுப்பேற்று கொண்டார். இந்த நிலையில் அவரது முடி சூட்டு விழா குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
‘3ம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா இந்த ஆண்டு மே மாதம் 6ம் தேதி முறைப்படி நடைபெற உள்ளது. சார்லசும் அவரது மனைவி கமீலாவும் லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் முறைப்படி பதவியேற்று கொள்வார்கள். சார்லஸ் மன்னரின் முடி சூட்டு விழாவையொட்டி காமன்வெல்த் நாடுகளில் 3 நாட்களுக்கு ஊர்வலங்களுடன் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மே 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வின்ட்சர் கோட்டை மைதானத்தில் ‘தேசத்தை ஒளிர செய்வோம்’ என்ற கருப்பொருளில் உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் பங்கேற்கும் பாரம்பரிய இசை, நடன, கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இவை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இந்த தனித்துவமான வரலாற்று நிகழ்வு கொண்டாட்டங்களுக்கு உலகம் முழுவதுமிருந்து ஏராளமானோர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.